18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு வழங்கினார்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறி இருந்தனர். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கில் புதிர் எழுந்தது.

இந்த வழக்கு 3வதாக ஒரு நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.அதன்படி மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் 12 நாட்களாக வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க தயாராக அதிமுக தயாராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.

இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர்., ஜெயலலிதா நல் ஆசியோடு ஆட்சி சிறப்பாக நடக்கிறது. இந்த தருணத்தில் ஒரு சிறந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. இறைவன் அருளால், இன்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அப்போதே தயாராகி விட்டோம். இடைத்தேர்தல எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
உடனடியாக தேர்தல் நடத்துவது என்பது சட்டப்பிரச்னை. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தீர்ப்பு அடிப்படையில், தேர்தல் நடந்தால், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.தினகரனுக்கு என்ன அனுபவம் கிடைத்துள்ளது என்பது தெரியவில்லை. 10 ஆண்டுகள் அவர், அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தலை அறிவித்தாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயக நெறிகளை போற்றிட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. ஐகோர்ட்டின் தீர்ப்பு, அதிமுகவின் ஒரு அணிக்கு சாதகமா, மற்றொரு அணிக்கு பாதகமா என்பது அவர்களின் பிரச்னை.
திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை உள்ளது. ஐகோர்ட் தீர்ப்பால், 18 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதனால், காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு, திமுகவிற்கு ஆதரவு அளிக்க மக்கள் தயாராக உள்ளனர். தீர்ப்பு உள்ளிட்ட எதையும் எதிர்பார்த்து திமுக காத்திருக்கவில்லை. எப்போதும், மக்களை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தொண்டர்கள் இனிப்பு வழங்கினர்.முன்னதாக தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்து உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. 3வது நீதிபதியாக இருந்தாலும், அவரும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாக காரணம் கூறி உள்ளார். தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளதாக கூறினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ஜெயலலிதாவின் ஆன்மாவின் துணையுடன் அதிமுக ஆட்சி நீடித்து நிற்கும். எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளோம். 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும், லோக்சபா தேர்தலோடு நடந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
கரூரில் நிருபர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக அரசை கவிழ்க்க வேணடும் என்று நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து வெற்றியை குவிக்கும்.

தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஐகோர்ட் தீர்ப்பு வரவேற்கக்கூடியது. சட்டசபை விதிகளின்படியே, சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வரவேற்கக்கூடியது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், தினகரனை நம்பி உள்ளவர்கள் இனியும் அவதிப்படாமல், அதிமுகவில் இணைய வேண்டும். மனக்கசப்பால், பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும். 18 பேரையும் மக்கள் பணியாற்ற விடாமல் தினகரன் துரோகம் செய்து விட்டார் என்றார்.

தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன், தகுதி நீக்கம் செல்லும் என ஒரு நீதிபதி கூறுகிறார். மற்றொவர் தவறு என்கிறார். தற்போது, 3வது நீதிபதி நீக்கியது தவறு எனக்கூறி உள்ளார். இதை எப்படி எடுப்பது என தெரியவில்லை. சிரிப்பதா அழுவதா என்ன செயவது என எங்களுக்கு தெரியவில்லை எனக்கூறினார்.

இது குறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில், நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது. ஏற்கனவே விமர்சனம் செய்து மன்னிப்பு கோரினார். இப்படித்தான் எடுக்கக்கூடாது முடிவை எடுத்துவிட்டு வருத்தப்படுகிறார் எனக்கூறினார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தீர்ப்பு ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முன்னரே தீர்ப்பு வந்துள்ளது. மேல்முறையீடு குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்று கொண்டாலும், ஏற்று கொள்ளாவிட்டாலும் தீர்ப்பு தீர்ப்பு தான். அதனை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சண்முகம் கூறுகையில், ஜெயலலிதாவின் அரசுக்கு கிடைத்த வெற்றி. துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், ஆதரவான தீர்ப்பு என்பதை விட, நியாயமான தீர்ப்பு எக்கூறலாம். தீர்ப்பு எதிர்பார்த்ததுதான், சபாநாயகரின் முடிவு சரியாகத் தான் இருக்கும். சபாநாயகருக்கு சட்டம் சரியான அதிகாரத்தை வழங்கி உள்ளது என்றார்.

தினகரன் கூறுகையில், ஐகோர்ட் தீர்ப்பால், எங்களுக்கு பின்னடைவு ஏதும் இல்லை. தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தோம். அதற்கு எதிராக தீர்ப்பு வந்து உள்ளது.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவு அடிப்படையில் செயல்படுத்துவோம்.

மேல்முறையீடா, தேர்தலா? என்பது பற்றி ஆலோசனை நடத்துவோம். மேல்முறையீடு செல்லவில்லை என்றால், தேர்தலை சந்திப்போம். தீர்ப்பால், எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில், தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதன்பிறகே, இடைத்தேர்தல் பற்றி பேச வேண்டும் என்றார்.

இதனிடையே, தீர்ப்பை எதிர்பார்த்து குற்றாலத்தில் தங்கியிருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், ஆர்வமாக இருந்தனர். தீர்ப்பு சாதகமாக வந்தால், பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர். பத்திரிகையாளர்களை சந்திக்க திட்டமிட்டனர். ஆனால், எதிராக தீர்ப்பு வந்ததால், அனைவரும் ஓட்டல் அறையிலேயே முடங்கினர். பின்னர் அனைவரும் மதுரை கிளம்பி சென்றனர்.