14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில், 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், ஹர்திக் படேலின் உடல் நிலை மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஹர்திக் படேல், 25. இவர், ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.

‘குஜராத் மாநிலத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், படேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இவர், ஆக., 25ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாதில் உள்ள, தன் பண்ணை வீட்டில், போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று(செப்.,7) 14வது நாளாக போராட்டம் நீடித்தது. போராட்டம் துவங்கியதில் இருந்து, ஹர்திக் படேல் சாப்பிடாததால், உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

மேலும், தன்னுடன் பேச்சு நடத்த, மாநில அரசுக்கு அளித்த, ஒரு நாள் அவகாசம் முடிவடைந்ததால், நேற்று இரவில் இருந்து, ஹர்திக் படேல் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தார். இன்று, உடல் நிலை மிகவும் மோசமானதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், குஜராத் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.