1,330 குறட்பாக்களுக்கும் கருத்தோவியம் தீட்டிய மாணவி

திருக்குறளை மாணவர்கள் எளிதாக புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, 1,330 குறட்பாக்களுக்கு பொருள் விளக்கம் தரும் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமசவுந்தரி.

விருதுநகர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த சேர்மநாதனின் மகள் ஹேமசவுந்தரி (23). மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள ஹேமசவுந்தரி, பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளார்.

உலகப் பொதுமறையான திருக்குறளில் ஈடுபாடு கொண்ட இவர், 133 அதிகாரங்களின் தலைப்புகளுக்கு ஏற்ப அதன் பொருளை உணர்த்தும் வகையில் 133 ஓவியங்களை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்துள்ளார்.

இதற்காக ஓவியத்தாளை நீளவாக்கில் வெட்டி, ஒட்டி 133 ஓவியங்களையும் திருக்குறள் அதிகாரத் தலைப்புகளுடன் நீண்ட வரிசையில் வரைந்து சாதனை படைத்தார்.

‘திருக்குறட் செல்வி’ விருது

இதற்காக ஹேமசவுந்தரிக்கு திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் கடந்த 17.2.2012-ல் திருக்குறட் செல்வி என்ற விருது குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டுள்ளது. திருக்குறள் இயல் இசை மன்றத்தின் சார்பில் 9.3.2013-ல் குறள் சித்திரசேனா என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, திருக் குறளில் உள்ள 1,330 குறட்பாக் களுக்கும், அதன் பொருளை விளக்கும் வகையில் ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டு வந்த ஹேமசவுந்தரி, தற்போது அதையும் முழுவதுமாக வரைந்து முடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது: பள்ளியில் படிக்கும்போதே திருக்குறளை ஆர்வமுடன் படித்தேன். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துக்கூறுவதால்தான், உலகப் பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகிறது. திருக்குறளுக்கு பலர் விளக்கவுரை எழுதியிருந் தாலும், இதுவரை யாரும் குறட்பாக்களின் பொருளை விளக்கும் வகையில் ஓவியம் வரைந்தது இல்லை.

ஹேமசவுந்தரி

பள்ளிகளில் திருக்குறளை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் மாணவர்கள், அதன் கருத்தை முழுமையாக அறிந்துகொள்வதில்லை. 1,330 குறட்பாக்களின் பொருளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஓவியங்களாக வரைந்துள்ளேன்.

கிராமப்புற பள்ளிகளுக்குச் சென்று பள்ளி நிர்வாகத்தினரின் அனுமதியுடன் மாணவர்களுக்கு திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் வரையப்பட்டுள்ள ஓவியங்களை காட்சிப்படுத்தி விளக்கம் கூற முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.