தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.