உ.பி.யில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசம் – காங்கிரஸ்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு கட்சிகள் மக்களை கவரும் நோக்கில் வாக்குறுதிகளை அறிவிக்கத்தொடங்கியுள்ளன.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோரோனா வைரஸ் தொற்றின் போது உத்தரபிரதேசத்தில் சுகாதார அமைப்பின் மோசமான நிலையை அனைவரும் பார்த்தனர். இது தற்போதைய உத்தரபிரதேச அரசின் (பாஜக) அக்கறையின்மை மற்றும் புறக்கணிப்பின் விளைவாகும்.
தேர்தல் அறிக்கை கமிட்டியின் ஒப்புதலுடன் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அமைத்த உடன் எந்த நோய்க்கும் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ செலவை அரசே (காங்கிரஸ்) ஏற்கும்’ என தெரிவித்துள்ளார்.