ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்குப் பயனளிக்கக் கூடியதே: மத்திய அரசு

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இத்திட்டத்தினால் தமிழ்நாடு பயனடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெடுவாசல் வயல்களிலிருந்து ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும், விவசாயிகள் அச்சம் தேவையற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் வேளாண்மை, மண்ணின் தன்மை, நிலத்தடி நீர் நச்சாதல் உள்ளிட்ட பயங்கர சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து அங்கு போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை நெடுவாசல், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகியவற்றில் ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும், இதற்கான ராயல்டி ரூ.40 கோடி, இது தவிர 500 பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டம், மீத்தேன் வெளியேற்றம் ஆகியவை காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடுகள் பற்றி நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘பொருளாதார பயன்கள்’ பற்றி மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு 2016-ல் சுமார் 31 ஒப்பந்தப் பகுதிகளை இதற்காக வழங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்த முறைப்படி 3 பிளாக்குகளில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட 31 சுரங்க ஒப்பந்தங்களில் தமிழகத்தில் 600 டன்கள் எண்ணெய் 30 கனமீட்டர் இயற்கை எரிவாயு நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இன்று வரை தமிழகத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக 700 கிணறுகளிலிருந்து உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.