ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஆன்மிக அரசியல் விவகாரத்தால், ‘ஐபேக்’ நிறுவனத்திற்கும், தி.மு.க., – ஐ.டி., அணிக்கும் இடையே, உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது.

சமீபத்தில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. அப்போது, தி.மு.க., – எம்.பி., ஒருவர், ‘அ.தி.மு.க., – பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இணையாக, தி.மு.க., – ஐ.டி., அணியின் செயல்பாடு இல்லை’ என, குற்றம் சாட்டினார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘ஐ.டி., அணி சிறப்பாக செயல்படுகிறது’ என, பாராட்டினார்.

ஐ.டி., அணி மாநில செயலராக, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் செயல்படுகிறார். தியாகராஜனின் குடும்பம், பாரம்பரியமாக ஆன்மிக ஈடுபாடுள்ளது என்பதால், ஆன்மிக அரசியல், மதம், ஜாதி போன்றவைக்கு எதிரான கருத்துக்களை, ஐ.டி., அணி புறக்கணித்து விடும்.

ஆனால், சென்னையில் உள்ள, தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவரின் வாரிசு, ஐ.டி., அணி மாநில நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். அவர், கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்துள்ளார்.மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்ட, கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த செந்தில்வாசனை, ஐ.டி., அணி நிர்வாகியான, எம்.எல்.ஏ., வாரிசு தான் பரிந்துரைத்துள்ளார் என, கூறப்படுகிறது.

கருப்பர் கூட்டம் விவகாரத்தில், தி.மு.க., மீது, ஹிந்துக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியிருப்பதால், அதை சரிக்கட்டுவதற்கு, ஆடிப்பெருக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கு, தி.மு.க.,வினர் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டினர். விநாயகர் சதுர்த்தி விழாவையும், தி.மு.க.,வினர், தங்கள் வீடுகளில் கொண்டாட முடிவு செய்து உள்ளனர். கருப்பர் கூட்டத்தால், தி.மு.க.,வில் ஏற்பட்ட அதிருப்தியை களைவதற்கு, ஆன்மிகத்திற்கு, தி.மு.க., முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, அக்கட்சி தலைமைக்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கிஉள்ளார்.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., – ஐ.டி., அணியின் துணை செயலர்களாக பணியாற்றி வந்த கார்த்திக், அப்துல்லா இருவரும், ‘ஐபேக்’ சிறப்பு பிரதிநிதிகளாக தற்போது நியமிக்கப் பட்டுள்ளனர். அந்த இரு நிர்வாகிகளும், தன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வந்திருப்பதை, பிரசாந்த் கிஷோர் விரும்பவில்லை. இதில், ஏதோ சூழ்ச்சி இருப்பதாக, அவர் நினைக்கிறார்.

அதனால், எம்.எல்.ஏ., வின் வாரிசு ஏற்பாடு செய்து கொடுத்த, சென்னை, அண்ணா நகரில் இயங்கி வந்த, ஐபேக் நிறுவனத்தின் அலுவலகம், தற்போது பூட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணத்தால் அலுவலகம் பூட்டப்பட்டதா; எம்.எல்.ஏ., வாரிசுக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நிலவும் பனிப்போரால் மூடப்பட்டுள்ளதா என்ற, கேள்வி எழுந்து உள்ளது. ஐபேக் நிறுவனத்திற்கு, தி.நகர், கிண்டி பகுதிகளில், புதிய அலுவலகம் தேடப்பட்டு வருகிறது. இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.