ஹிந்து விரோத கட்சிகளுக்கு இல்லை ஓட்டு: வீடுகள் தோறும் விழிப்புணர்வு நோட்டீஸ்

ஹிந்து விரோத கட்சிகளுக்கு ஓட்டு இல்லை என விருதுநகரில் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சமீப காலமாக அரசியல் கட்சிகள் பல முற்போக்கு என கூறி ஹிந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டு வெகுண்டெழுந்த பலர் தற்போது தேர்தல் நேரத்தில் தங்கள் எதிர்ப்பை பலமாக காட்டி வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் பெரியகாளியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்பு ஹிந்து விரோத கட்சிகளுக்கு எங்கள் ஓட்டு கிடையாது என்றும், ஹிந்து கோயில், கோபுரங்கள், மடலாயங்களை மதிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என எச்சரிக்கும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டி உள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது: விஸ்வ ஹிந்து பரிஷத்தில் மாவட்ட துணைத் தலைவராக உள்ளேன். என் கடையிலும், நாராயணபுரத்தில் உள்ள தோட்டத்தில் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் வைத்துள்ளேன். சிலர் ஹிந்து மக்களை மட்டும் குறி வைத்து இழிவாக பேசுகின்றனர். எங்கள் மதத்தை இழிவாக பேசி எங்களிடமே ஓட்டு கேட்பது சரியில்லை. நாங்கள் இனியும் அவர்கள் பேச்சை கேட்க போவதில்லை. நான் என்னுடைய ஆதங்கத்தை நேரடியாக வெளிப்படுத்தி உள்ளேன், என்றார்.