‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கும், ஐ.நா., சபை, ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினர் மீதான தாக்குதலை ஏன் கண்டுகொள்வதில்லை’ என, இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

ஐ.நா., பொதுச் சபையில், ‘அமைதி கலாசாரம்’ என்ற பெயரில், மத ரீதியில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவின் முதன்மை செயலர், ஆஷிஷ் சர்மா பேசியதாவது:கிறிஸ்துவம், யூத, இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து, ஐ.நா., சபையில் இத்தனை ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த மதத்தினர் மீதான தாக்குதலை, இந்தியாவும் கடுமையாக எதிர்க்கிறது. அதே நேரத்தில் மற்ற மதத்தினர் குறித்து, ஐ.நா., பாராமுகமாக இருந்து வருகிறது.புத்த, ஹிந்து, சீக்கிய மதத்தின் மீதான தாக்குதல்களை இத்தனை காலம் ஏன் பொருட்படுத்துவது இல்லை. ஆப்கானிஸ்தானில், புத்த மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில், ஹிந்து மற்றும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது; மதச்சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட மதங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செயல்படுவதன் வாயிலாக, அமைதி கலாசாரம் எப்படி உருவாக முடியும்… நாம் இங்கு மனித நாகரிக கூட்டணியை உருவாக்க வேண்டும்; மோதல்களை அல்ல. அதற்கேற்ப, ஐ.நா., செயல்பட வேண்டும். அதன் பார்வை பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும்.

ஹிந்து, புத்தம் மற்றும் சீக்கிய மதங்களின் பிறப்பிடமாக மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து மதங்களையும் உள்ளடக்கியதாக இந்தியா விளங்குகிறது. இந்தியா, கலாசாரத்தின் அடையாளமாக மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் அடையாளமாக விளங்குகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.