ஹம்பி படவிலிங்க அர்ச்சகர் கிருஷ்ண பட் காலமானார் !!

கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள சிவலிங்க கோவில் அர்ச்சகரும், சிவபக்தருமான கிருஷ்ண பட், 87 வயதில் காலமானார். விஜயநகரா மாவட்டம் புராதன ஹம்பி நகரில் படவிலிங்க கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தின் நடுவில் மூன்று மீட்டர் உயரத்தில் ஒரே கல்லாலான சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கசரவள்ளி கிராமத்தை சேர்ந்த இவர், 1979 ஹம்பிக்கு வந்து தங்கினார். அன்று முதல் கிருஷ்ணர் பட் தினமும் படவிலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் பூஜை செய்வதை நிறுத்தினார். தற்போது அவரது மகன் பூஜையை தொடர்ந்து செய்கிறார்.

இந்நிலையில் அவர் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவர் பக்தர்களிடம் அன்பாகப் பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். மிகவும் எளிமையாக வாழ்ந்த சிவபக்தர் தினமும் குளத்தில் இறங்கி குடத்தில் நீரை நிரப்பி லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். இதனை அவர் கடமையாக கொண்டிருந்தார். இவர் லிங்கத்தின் மீது ஏறும் ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது.