ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் – பிலாவால் புட்டோ

ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி உள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது அணுஆயுத போர் தொடுக்க போவதாகவும், வான்வெளியை மூடப் போவதாகவும் பாக்., மிரட்டல் விடுத்து வருகிறது. அத்துடன் இந்தியா – பாக்., இடையேயான ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும் இந்த பிரச்னையை கொண்டு சென்றது.
காஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசின் இத்தகைய செயல்பாடுகளை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுடன், கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பாக்., மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரி, சிறையில் இருக்கும் தனது தந்தை ஆசிப் அலி சர்தாரியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் இம்ரான் கான், ஸ்ரீநகரை மறந்து விட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் முஷாபராபாத்தை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசு ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டது. இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த போது பாக்., அரசு தூங்கிக் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதில் பிஸியாக இருந்தது.

முதலில், பாக்.,ன் கொள்கையானது ஸ்ரீநகரை எப்படி பெறுவது என்பதிலேயே இருந்தது. தற்போது இம்ரான் கான் ஆட்சியின் தகுதியற்ற செயல்பாட்டாலும், தவறான வெளிநாட்டு கொள்கையாலும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஷாபராபாத்தை எப்படி காப்பாற்றுவது என்ற நிலைக்கு சென்றுள்ளது என்றார்.
ஐக்கிய அரபு நாடுகளின் அரசு, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிலாவால், பாக்.,ன் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்ததை இது காட்டுகிறது என்றார்.