ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவிய இந்தியர்

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி துபாய் ஹோட்டலி இறந்தார். அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப இந்தியர் ஒருவர் உதவியுள்ளார். அவர் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் ஷெர்ரி தாமரச்சேரி என்று தெரியவந்துள்ளது. 44 வயதாகும் தாமரச்சேரி, துபாயில் இறந்த 4,700 பேரின் உடல்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார். இதுபோன்று 38 நாடுகளுக்கு அவர் உடல்களை அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்ல தெரியாமல் விழிக்கும் மக்களுக்கு உதவுவது குறித்து தாமரச்சேரி கூறியதாவது:

இங்கு யார் இறந்தாலும், ஏழை, பணக்காரர். ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அல்-கசின் என எங்கு இறந்தாலும் சட்ட நடைமுறைகள் ஒன்றுதான். அவர்கள் விபத்திலோ அல்லது ஓட்டல் அறையிலோ இறந்தால், போலீஸார் வந்து சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை நடக்கும். பின்னர் பிணவறையில் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

நேற்று மட்டும் 5 பேர்களின் உடலை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பியிருக்கிறேன். இதில் நடிகை ஸ்ரீதேவியின் உடலும் அடக்கம். ஸ்ரீதேவியின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் போலீஸாரின் நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டது. நடைமுறைகளை வேகமாக முடிக்க நான் முயற்சி செய்தேன். இதற்கிடையே எனக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் இந்தியாவிலிருந்து வந்தன. பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். போலீஸாரிடமிருந்து உடலை ஒப்படைக்க சான்றிதழ் கிடைத்ததும் நாங்கள் உடனடியாக பிணவறையைத் தொடர்புகொண்டோம்.

பின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்யும் பணியை துரிதப்படுத்தினோம். ஸ்ரீதேவியின் உடலுடன் மேலும் 3 பேரின் உடலுக்கு எம்பாமிங் செய்யவேண்டியிருந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் விமானம் நிற்கும் இடத்துக்கு ஸ்ரீதேவியின் உடலை அனுப்பினோம். அவரது உடலை ஒப்படைத்த பின்னர்தான் நிம்மதியாக இருந்தது.

பின்னர் அஜ்மானிலுள்ள எனது வீட்டுக்கு வந்து மனைவி, மகளிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன். இங்குதான் என்னுடைய மெக்கானிக் ஷாப்பை நடத்தி வருகிறேன். ஆனால் எனது வேலையை விட, சடலங்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் சேவையை முக்கியமாக செய்கிறேன். இறந்தவர்களின் உறவினர்கள் வழி தெரியாமல் நிற்கும்போது உதவுகிறேன். இதில் மன நிம்மதி கிடைக்கிறது.

இவ்வாறு தாமரச்சேரி கூறினார்.