ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 9

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்

கலெக்டர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். கிங்ஸ்டன், வினிதா, தமிழரசன், மாரிச்சாமி ஆகியோர் உயிரிழந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலியானவர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விவரம் வருமாறு:கந்தையா, கிளாஸ்டன், தமிழரசன், சண்முகம், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித் குமார், ஸ்னோவ்லின், வினிதா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 கம்பெனி போலீசார் விரைந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர்.

வன்முறை கும்பலை சமாளிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுதும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.