ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொது செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்த சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து , அவருக்கு பதிலாக கட்சி சட்டதிட்ட விதி18, 19 பிரிவுகளின் படி இளைஞர் அணிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதியை பொறுத்தவரை அவர் முதலில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும்,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம் முழங்கிட கொண்டாடினர்.

திமுகவில் ஸ்டாலின் கூட பொறுப்பில் அமர வைக்கப்பட காலம் தேவைப்பட்டது. ஆனால் 41 வயதான உதயநிதிக்கு விரைவாக பொறுப்பு கிட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பார்லி., மற்றும் சட்டசபை தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தமைக்காக தற்போது இளைஞரணி செயலர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.