ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார். இதனால் மிரண்டு, உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஓடினால், அங்கே, ‘செக்’ வைக்க, நடிகை காயத்ரி ரகுராமை ரெடியாக இருக்க சொல்லி விட்டது மேலிடம்.

ஹிந்து எதிர்ப்பு கொள்கையை கைவிட மறுக்கும், தி.மு.க.,வை பிரதான எதிரியாக பா.ஜ., கருதுவதால், அக்கட்சிக்கு எதிராக ஹிந்து ஓட்டுகளை ஒருமுனைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. ‘அந்த வகையில், ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்துகிறோம்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கல்வியறிவு பெற போராடி, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி , ஐ.பி.எஸ்., அதிகாரியாகி, நிர்வாகத் திறமையை நிரூபித்த இளைஞரை முன்னிறுத்தினால், எதிரே நிற்கும் ஸ்டாலினின் பலவீனங்கள் பட்டவர்த்தனமாக மக்களுக்கு தெரியும்’ என, ஒரு நிர்வாகி குறிப்பிட்டார்.

அதே போல, ‘குஷ்பு அல்லது காயத்ரியால், தி.மு.க.,வின் குடும்ப அரசியல், குறுநில மன்னர்கள் ஆதிக்கம், பெண்களை கொச்சையாக விமர்சிப்பது, பெண் தெய்வங்களை கேலி செய்வது போன்ற விஷயங்களை, பெண்களின் மனதில் பதியும் விதமாக பிரசாரம் செய்ய முடியும். அதற்கு நிச்சயம் பலன் இருக்கும்’ என்றார் அவர்.