வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி

இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார். பாடகி சின்மயிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 மறுபுறம் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்வது ஏன்? ஆதாரம் உள்ளதா? திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என்றெல்லாம் அவருடைய புகாருக்கு எதிராக கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு பெண்கள் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொல்லை சம்பவங்களால் பெண்கள் மட்டும்தான் பாதிப்பை எதிர்க்கொள்ள வேண்டும், அவர்களுடைய கனவுகள் எப்படி பாதிப்பை சந்திக்கும் என்று பதிவிட்டார்கள். சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கும் பத்திரிக்கையாளர்களும் இதுதொடர்பாக நீண்ட விளக்கங்களையும் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் அவருடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
காலையில் இதுதொடர்பாக வீடியோவில் நீண்ட விளக்கம் கொடுத்த சின்மயி, அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க அப்போது தைரியம் இல்லை. என்னுடைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானது. பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்றார். இருப்பினும் அவரை விமர்சனம் செய்யும் வகையிலான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இதற்கிடையே பெண்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,  ‘பப்ளிசிட்டிக்காக’ வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரங்கள் கிடையாது. பாலியல் புகார்களை சொல்லும் சூழல் சமூகத்தில் தற்போதுதான் உருவாகியுள்ளது. புகார் அளித்ததால் எனக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும் என்று கூறியுள்ளார் சின்மயி. மேலும் உங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய சின்மயி, என்னுடைய வழக்கறிஞருடன் சட்டத்தின் ஷரத்துக்கள் தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்ட பின்னர் வழக்கு தொடர்வது தொடர்பாக முடிவு செய்வேன் என கூறியுள்ளார்.