வைரசை பரப்பியது சீனா தான்: டிரம்ப் மீண்டும் அதிரடி !!

உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் டிரம்ப் அந்த கூற்றை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோவிட்19 வைரஸ் பெருந்தொற்றாக மாறி உலகையே உலுக்கி வருகிறது. தொற்று பரவத் துவங்கியது முதலே, ‘கோவிட் வைரஸ் பரவ சீனா காரணம்’ என, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கோவிட் வைரஸ் இயற்கையாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்றும், ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த கூற்றை ஆதரித்து பேசியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், ‘சீனா தான் வைரசைப் பரப்பியது என நான் தான் அப்போதே தெரிவித்தேன். ஆனால் தற்போது தான், எனது ‘எதிரி’ என்று அழைக்கப்படுபவர்களும் கூட, வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சீனா வைரஸ் தான் கோவிட் என, டிரம்ப் சொல்வது சரிதான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வைரசால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புக்கு சீனா இழப்பீடு தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.