வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது – எல்.முருகன்

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேல் யாத்திரை தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவ.,17 தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்துகொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24ல் கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2ல் இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.

இறுதி நாளான டிசம்பர் 6ல் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜே.பி. நட்டா கலந்துகொள்வது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல்யாத்திரை நடத்துகிறோம். கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா?. சாலையில் செல்பவர்களை எல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? இவ்வாறு அவர் கூறினார்.