வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது என தகவல் வெளியாகியது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் 14-ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான செய்தி சட்ட அமைச்சகத்திடம் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது என செய்தி வெளியாகியது.

இன்று காலை தேர்தல் ஆணையம் தரப்பில், மீடியாக்களில் வருவதுபோல் வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும், அறிக்கைகளையும் அளித்துவிட்டோம். அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் உத்தரவுக்கு ஏற்க நடவடிக்கை இருக்கும் ” எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. அதாவது, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது. தேர்தல் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கையெழுத்திட்டதும் ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி ஒன்றில் தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேலூர் தொகுதியில் தேர்தல் தடை செய்யப்பட்டாலும், இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.