வெள்ளை மாளிகையில் தீபாவளி அதிபர் டிரம்ப் பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், நாளை தீபாவளி கொண்டாடுகிறார். தீபாவளி பண்டிகை, அக். 27ல், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, 2009 முதல், வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவங்கினார்.இதையடுத்து, அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், 2017 – 18களில், தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

கடந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டங்களின் போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் நவ்ஜீத் சிங்கை, அதிபர் டிரம்ப் அழைத்தார்.இம்முறை மூன்று தினங்கள் முன்னதாக, நாளை நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டத்தில், யார் யார் பங்கேற்கவுள்ளனர் என்பது பற்றி, தகவல் வெளியிடப்படவில்லை.

அன்றைய தினம், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள், சில குறிப்பிட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள், முன்னிலையில், அதிபர் டிரம்ப் தீபாவளி கொண்டாடவுள்ளார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபாட், கடந்த சனி அன்று, தீபாவளி கொண்டாடினார். அன்றைய தினம், கவர்னர் மாளிகை முழுவதும், அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.