வெள்ளை மாளிகைக்கு வெடிபொருள் ‘பார்சல்’

நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வசிக்கும், வெள்ளை மாளிகை, முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரது வீடுகளுக்கு, சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், பார்சலில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அமெரிக்காவின் ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய, முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரது வீடுகளுக்கு, சந்தேகத்துக்கு இடமான வகையில் அனுப்பப்பட்டிருந்த பேக்கேஜ்கள் சோதனையிடப்பட்டன.அவற்றில், சக்திவாய்ந்த வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோன்ற பார்சல், வெள்ளை மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.வழக்கமாக நடக்கும் தீவிர சோதனைகளில், இந்த சதி திட்டம் அம்பலமாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரிகிளின்டன் வசித்து வரும் வீடு, மன்ஹாட்டன் நகரிலும், ஒபாமாவின் வீடு, வாஷிங்டன் நகரிலும் உள்ளன.தற்போதைய மற்றும் முன்னாள் அதிபர்களின் வீடுகளுக்கு, ரகசிய புலனாய்வு பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.வெடிபொருட்களை யார் அனுப்பியது என்பது குறித்து, தீவிரவிசாரணை நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.