வெற்று வார்த்தைகளால் நிரம்பிய பட்ஜெட் – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா:
முற்றிலும் வெற்று வார்த்தைகளால் நிரம்பிய, ஆதாரமில்லாத வருமானங்களோடு, தவறாக வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
2017-2018-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று
தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதல்
மந்திரி மம்தா பானர்ஜி, பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
எந்த வகையிலும் இருந்து வராத ஆதாரமற்ற நிதியைக்கொண்டு, அடிப்படை காரணமற்ற, எந்த பயனுமில்லாத, இலக்கு இல்லாத வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து, எதிர்காலத்தில் அரசின் மீது மக்கள் வைக்கக் கூடிய நம்பிக்கையை இழந்துவிட்டது.
வரி கட்டுபவர்களுக்கு, பணம் எடுப்பதற்கு இன்னமும் ஏன் கட்டுப்பாடுகள்? உடனடியாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குங்கள். பணமதிப்பிழப்பு
நடவடிக்கையின் மூலம் நிகழ்ந்த மாற்றத்திற்கான ஆதாரங்கள் எங்கே?, தவறான வழிகாட்டுதலில், எந்த அர்த்தமும் இல்லாமல், முழுக்க முழுக்க
வெற்று வார்த்தைகளால் நிரம்பிய பட்ஜெட் இது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலின் போது பங்கேற்கமாட்டோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.