வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்தார்.

இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த வெட்டுக்கிளிகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தலறினால் எதிர்காலத்தில் இது இலங்கைக்கு பாரிய பிரச்சினையாக இது உருவெடுக்கக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

இந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளியும், இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெட்டுக்கிளியும் ஒன்றா என வினவினோம். இந்தியாவை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளியும் இலங்கையை அச்சுறுத்தும் வெட்டுக்கிளியும் வேறுபட்டவை என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் குறிப்பிட்டார்.

இந்த வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் எவ்வாறு படையெடுத்தன எனவும் அவரிடம் வினவினோம்.இந்த வெட்டுக்கிளிகள் இலங்கைக்குள் படையெடுத்தவிதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குள் ஏற்கனவே இருந்த வெட்டுக்கிளிகளின் இனப் பெருக்கத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக குறித்த வெட்டுக்கிளி வெளிநாடொன்றிலிருந்து அண்மை காலத்தில் வந்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தாம் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.