வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்; இலங்கையில் மீண்டும் பரபரப்பு

கொழும்பு:வெடி குண்டு நிரப்பப்பட்ட லாரியும், வேனும், இலங்கை தலைநகர் கொழும்புக்குள் ஊடுருவியதாக, பாதுகாப்புஅதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து,நாடு முழுவதும், மீண்டும் பதற்றமும், பீதியும் நிலவியது. அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள், நட்சத்திரஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்தகுண்டுகள் வெடித்தன.இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 38 பேர் உட்பட, 321 பேர், உடல் சிதறி பலியாகினர். மேலும், 500க்கும் மேற்பட்டோர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிர சோதனை

இந்த கொடூர தாக்குதலுக்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கையில் நெருக்கடி நிலை அமல்படுத்தப் பட்டு உள்ளது. கண்காணிப்பும், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் கொழும்புக்குள், பயங்கர வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட லாரியும், வேனும் ஊருவியுள்ளதாக, துறைமுக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், போலீசாருக்கும், ராணுவத்திற்கும், நேற்று, தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கொழும்பு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தினர்.
நகருக்குள் ஏற்கனவே உள்ள, லாரி, வேன், கார்

உள்ளிட்ட வாகனங்களிலும், சோதனை நடத்தினர். இந்த தகவலை அடுத்து, கொழும்பு மட்டுமல்லா மல், இலங்கை முழுவதும், பீதியும், பதற்றமும் நிலவியது.இதற்கிடையே, இலங்கை யில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு, சர்வதேச பயங்கவாத அமைப்பான, ‘இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்’ எனப்படும், ஐ.எஸ்., பொறுப்பேற்று ள்ளதாக, நேற்று மாலை, தகவல் வெளியானது.

‘அமக்’ என்ற செய்தி நிறுவனத்தின் மூலமாக, ஐ.எஸ்., அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டு உள்ளதாக, இலங்கை புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த, கிறிஸ்துவ மக்களை குறி வைத்து, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக, இலங்கை பார்லிமென்ட், நேற்று அவசரமாக கூடியது. இதில், இலங்கை ராணுவ இணை அமைச்சர், விஜேவர்த்தனே கூறியதாவது: தொடர் குண்டு வெடிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சில முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன.

நியூசிலாந்து நாட்டின், கிறைஸ்ட் சர்ச் நகரில், கடந்த மாதம், 15ல், இரண்டு மசூதிகளில், துப்பாக்கி யுடன் புகுந்த ஒரு நபர், சரமாரியாக சுட்டான்.இதில், மசூதிகளில் இருந்த, 50 பேர் பலியாகினர்; இது, உலகம் முழுவதும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே, கிறிஸ்துவ மக்களை குறிவைத்து, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்புகள் நடப்பதற்கு முன், உள்ளூரைச் சேர்ந்த ஒரு அமைப்பின் உறுப்பினர், நியூசிலாந்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக, இதுவரை, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித வெடி குண்டுகளாக செயல்பட்ட ஏழு பேரும், இலங்கை யில் உள்ள, உள்ளூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  என்பதால், அவர்களது பின்னணி குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கவலை: 

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:சர்வதேச பயங்கரவாதத்தின் கரங்கள், இலங்கையையும் எட்டியுள்ளது என்பது, கவலை அளிக்கிறது. இலங்கையில், இதுவரை நடந்த தாக்குதல்களை விட, இது, கொடூரமானது என்பதில்,எந்த சந்தேகமும் இல்லை.நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் அமைப்புகளும், இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சிலருக்கு மட்டுமே, இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என், தெரியவந்துள்ளது.

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையை, வெற்றிகரமாக முறியடித்து, விரைவிலேயே இயல்பு நிலையை ஏற்படுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நான், அதிபர் பதவியிலிருந்து விலகியபோது, நாட்டில், அமைதி நிலவியது. பயங்கரவாதம் இல்லாத நாட்டை, ஒப்படைத்து விட்டுச் சென்றேன். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல், பயங்கரவாதத்தை வளர அனுமதித்து விட்டனர்.

ராஜபக்சேஇலங்கை முன்னாள் அதிபர்

மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு, இலங்கை அரசு, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து, இலங்கை அரசு செய்தி தொடர்பாளர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது: இலங்கை யில் தாக்குதல் நடத்த, சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள், முன்கூட்டியே எச்சரித்திருந்தன.

அதுகுறித்து, அரசு பரிசீலித்தது. ஆனாலும், தாக்குதல்களை தடுக்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக, பாதிக்கப்பட்ட மக்களிடம், அரசு தரப்பில் மன்னிப்பு கோருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். குண்டு வெடிப்புகளில் சேதம் அடைந்த தேவாலயங்கள், அரசு செலவில் சீரமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தியர்கள் 10 பேர் பலி

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு களில், இந்தியாவைச் சேர்ந்த, எட்டு பேர் பலி யானதாக, நேற்று முன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த, பட்டுராஜா, மேரி கவுடா ஆகிய இரண்டு பேரின் உடல்கள், நேற்று, அடையாளம் காணப்பட்டன. இதை அடுத்து, இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை, 10 ஆக அதிகரித்துள்ளது.