வீணாகும் மழைநீர்; பொதுமக்கள் தாமாக முன் வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கை:

‘‘எங்கெங்கு காணினும் தண்ணீரடா… ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையே’’ என்ற ஆங்கிலக் கவிஞர் கோல்ரிட்ஜின் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது சென்னை மாநகரம் தான்.

வட கிழக்குப் பருவமழையின் தொடக்க நாளிலேயே சென்னை மாநகரம் மிதக்கும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தாலும் அதை நாம் பயனுள்ள வகையில் சேமிக்கத் தவறுவது வருத்தமளிக்கிறது.

சென்னையில் கடந்த மூன்று நாட்களில் 200 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்திருக்கிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த அளவு மழை பெய்திருந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கும். ஆனால், சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கிணறுகள் வழியாக பார்த்து உணரக்கூடிய அளவுக்கோ, அளவிடும் அளவுக்கோ உயரவில்லை.

பெய்த மழைநீர் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் புதிய ஏரிகள் உருவானது போன்று தேங்கி நிற்கின்றன. இன்னும் சில இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. உண்மையில் ஒரு கிரவுண்ட் பரப்பளவில் கடந்த 3 நாட்களில் பெய்த 200 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தால் 4.8 லட்சம் லிட்டர் நீர் கிடைத்திருக்கும்.

சென்னை பெருநகரத்தின் பரப்பளவு 1189 சதுர கி.மீ ஆகும். அப்படியானால் இந்த பரப்பளவில் எவ்வளவு நீரை சேமித்து வத்திருக்கலாம், அதைக் கொண்டு எத்தனை மாதத்திற்கான குடிநீர் தேவையை சமாளித்து இருக்கலாம் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். அவ்வளவு நீரையும் நாம் வீணடித்திருக்கிறோம்.

மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்க முடியாமல் வீணடிப்பதில் அரசுக்கு எவ்வளவு பங்குண்டோ, அதே அளவு பங்கு பொதுமக்களாகிய நமக்கும் உண்டு. மழை நீரை சேமித்து வைப்பதில் நம்மில் பலர் ஆர்வமும், அக்கறையும் காட்டாதது தான் இதற்கு காரணமாகும்.

2000-01 காலத்தில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏரி, குளங்களை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து தூர்வாரின. அதைத் தொடர்ந்து சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

அந்தக் கருத்தரங்கத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் தான் தமிழ்நாடு முழுவதும் கட்டாய மழைநீர் சேமிப்புத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். அத்திட்டம் அப்போது அரைகுறையாக செயல்படுத்தப்பட்டாலும் அதனால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்கு காரணமாகும். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகரம் முழுவதும் கான்கிரீட் காடாக மாற்றப்பட்டு, நிலத்தடியில் நீர் நுழைய வாய்ப்பில்லாமல் போனதே எல்லா சிக்கலுக்கும் காரணம் ஆகும். ஒரு சில தனி வீடுகளைத் தவிர சென்னையில் வேறு எங்கும் மழைநீர் சேமிப்பு என்பது நடைமுறையில் இல்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதுமானதாக இருப்பதால் பயனுள்ள அத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

மழைநீர் சேமிப்புத் திட்டம் என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் திட்டமாகும். வீடுகளிலும், சாலையோரங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும். அதன்மூலம் கொசு உற்பத்தியையும், அதனால் நோய் பரவுவதையும் முற்றிலுமாக தடுக்க முடியும். தமிழகத்தில் இப்போதுள்ள ஆட்சியாளர்கள் பயனுள்ள திட்டம் எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.

தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையில், இந்த ஆட்சி ஒழியும் வரை, தமிழக மக்கள் தான் தங்களுக்கான திட்டங்களை தாங்களே தான் வகுத்து செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் நோயற்ற, குடிநீர் தட்டுப்பாடற்ற வாழ்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.