விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!

டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், காலிஸ்தான் கூட்டத்தின் ஒட்டு பெற தேவையில்லாமல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம், ‘சம்மன்’ அனுப்பியது.

‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், இரு நாட்டு உறவு பாதிக்கப்படும்’ என, அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மூன்றாவது முறையாக பேச்சு நடக்க உள்ளது.

இதற்கிடையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள், வட அமெரிக்கா நாடான கனடாவில், சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி, கவலை அளிக்கிறது.

‘எங்களின் கவலையை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம். அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க, கனடா எப்போதும் துணை நிற்கும்’ என்றார்..

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, கனடா அமைச்சர்கள் சிலரும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு, மத்திய அரசு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தது. ‘உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்’ என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா துாதர் நதிர் படேலுக்கு, வெளியுறவு அமைச்சகம் நேற்று, ‘சம்மன்’ அனுப்பியது. வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில், கனடா துாதர் நதிர் படேல் ஆஜரானார். அவரிடம், விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கனடா பிரதமர் பேசியதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கனடா பிரதமர் தெரிவித்த கருத்துகள், ஏற்க முடியாதவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், மற்ற நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கனடாவில், இந்திய துாதரகம் முன், பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது போல், கனடா தலைவர்களும் பேசி வருகின்றனர். இதனால், துாதரக ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இந்திய துாதரக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என, கனடா துாதரிடம் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.