விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியப் பிரதேசத்தில் வேளாண் விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
உணவு படைக்கும் கடவுள்கள் விஷயத்தில் மென்மையையும், பொறுமையையும் கடைபிடிக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்தியாவில் வேளாண்துறை வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட மத்திய பிரதேசத்தில் விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உழவர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்குவதுடன் 10 விழுக்காடு வட்டி மானியமும் வழங்குவது மத்தியப் பிரதேசம் மட்டுமே. அதுமட்டுமின்றி, பெரிய அளவில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி உழவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்திருப்பதை மறுக்க முடியாது.
இத்தனைக்கு பிறகும் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யும்படி கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லை என்பது தான்.
குறிப்பாக மான்ட்சர் மாவட்டத்திலுள்ள பைபர்ஸ்நாத் பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், மாநில அரசு தங்களின் கோரிக்கைகளை கேட்கவில்லையே என்ற கோபத்தில் காய்கறிகள் மற்றும் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள். போராடிய விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்புகை குண்டுகளையும் வீசி காவல்துறையினர் தாக்கியதால் தான் போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.
மத்தியப் பிரதேச அரசு விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்து உத்தரவாதம் அளித்திருந்தால் பதற்றத்தையும், துப்பாக்கிச்சூட்டையும் தவிர்த்திருக்கலாம். துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் நிலையே இப்படி இருந்தால் மற்ற மாநில விவசாயிகளின் நிலைமையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் விளைபொருட்களை சந்தைக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தை மதித்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மராட்டிய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆந்திரம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் சென்னை, தஞ்சாவூர், தில்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதை ஆய்வு செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட செயல் என்றாலும் கூட, இப்போது மாநில அரசுகளின் நிதிநிலை மோசமாக இருப்பதாலும், பொதுத்துறை வங்கிகளின் உழவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாலும் விவாசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க முன்வர வேண்டும்.
கடந்த 2008-ஆம் ஆண்டு இதேபோல் அசாதாரண சூழல் உருவானபோது ரூ.60,000 கோடி பயிர்க்கடனை அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தள்ளுபடி செய்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
பயிர்க்கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வாகவே அமையும். ஆனாலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்த தற்காலிகத் தீர்வு அவசியமாகும்.
எனவே, இப்போதைய சூழலில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு சாதகமான கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளா