விரைவில் 75 சதவீத விமான சேவைக்கு அனுமதி – இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்

இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நோய் பரவலை குறைக்க, விமான சேவை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளை முடக்கியுள்ளன. இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகள் செயல்படுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் அதன் எல்லை பகுதிகளை மூடியுள்ளன. ஜூன் 26 அன்று, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான நிறுவனங்கள் தங்களது கொரோனாவிற்கு முந்தைய உள்நாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 45 சதவீதத்தை இயக்க அனுமதித்தன.

ஊரடங்கு தளர்வுகளையொட்டி, உள்நாட்டு விமான சேவைகளில் 60 சதவீதம் வரை நாட்டிற்குள் இயக்க முடியும் என செப்.,2 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சர்வதேச விமானங்களின் எதிர்காலம் ஒரு தடுப்பூசி கிடைப்பதை பொறுத்தது. ஏனெனில் நோய் தொற்றுக்கான தடுப்பூசி வந்தால் அனைத்து நாடுகளும் ஒருவித நம்பிக்கையுடன் இருக்கும்.

தொற்று நோய் காரணமாக மார்ச் 23 முதல் நாட்டில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மே.,25 முதல் உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் மறு தொடக்கம் செய்தன. இருப்பினும், அந்த நேரத்தில் விமான நிறுவனங்கள், கொரோனா தொற்றுக்கு முந்தைய உள்நாட்டு விமானங்களில் 33 சதவீதத்திற்கு மேல் இயக்க அனுமதிக்கப்படவில்லை. அடுத்த 7 முதல் 10 நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக / ஆரோக்யமாக இருந்தால் 75 சதவீதம் வரை விமான சேவைகள் இயங்க அனுமதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் பிரதீப் சிங் கரோலா கூறும்போது, பண்டிகை காலம் துவங்குவதால் இது உள்நாட்டு விமான சேவையின் இரண்டாம் கட்டமாக இருக்கும். அத்துடன் விமான நிலையங்களில், அதிக பயணிகளை வரவேற்கும் சவாலை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. இதற்காக நாங்கள் சமீபத்தில் விமான நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம் என்று தெரிவித்தார்.