விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும்.

இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், எல்டிடிஈயை வீழ்த்தி அதன் கொடூரமான தீவிரவாத செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை. ஆனால், எல்டிடிஈ பயங்கரவாதத்தின் மிச்சங்கள் உலகம் முழுவதும் விழிப்புடன் இருப்பது எந்தவொரு நாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. எனவே எல்டிடி மீதான தடையை பிரிட்டன் அரசு அப்படியே வைத்திரு்ககும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

இந்த நிலையில், இலங்கை வெளி விவகார அமைச்சம், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறைகளை தூண்டவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உட்படுத்துவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்போதும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் செயல்பாடுகளால், இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமன்றி, பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையத்தில் இலங்கை அரசு மனுதாரர் இல்லையென்றபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உரிய தகவல்களை பிரிட்டன் அரசுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், அப்போது மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.