Go to ...
Canada Uthayan Tamil Weekly
* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி    * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண்    * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா    * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, May 25, 2018

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்


தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டு, தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மை காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டு மக்களை எந்த நேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கிவிட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னை, திருச்சி, தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்பது கிட்டத்தட்ட இந்திமயமாக்கப்பட்டுவிட்டது.

வர்த்தக ஒலிபரப்பில் காலை முதல் மாலை வரை பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன. உள்ளூர் நிகழ்ச்சித் தயாரிப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, டெல்லி நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் கூட அவற்றில் இந்தி விளம்பரங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது வர்த்தக ஒலிபரப்பு தான். திரைப்பட பாடல்கள் சுவையான தகவல்களுடன் தொகுத்து வழங்கப்படுவதை அனைத்துத் தரப்பு மக்களும் ரசித்துக் கேட்பது வழக்கம். வயல்வெளிகளில் வேலைக்கு செல்பவர்கள், ஊர் ஊராகச் சென்று வணிகம் செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கே இந்த நிகழ்ச்சிகளும், தமிழ் செய்திகளும் தான். ஆனால், அவையெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டன.

வர்த்தக ஒலிபரப்பில் எப்போது பார்த்தாலும் யாருக்கும் புரியாத இந்தி நிகழ்ச்சிகள் தான் ஒலிபரப்பாகின்றன. மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு செய்திகளும் தப்பவில்லை. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ‘சந்தேஷ் டூ சோல்ஜர்ஸ்’ (Sandesh to Soldiers) என்ற நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது.

‘சந்தேஷ் டு சோல்ஜர்ஸ்’ நிகழ்ச்சி ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சியாகும். தேசப்பற்றை வளர்க்க இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியை இந்தியில் தான் ஒலிபரப்ப வேண்டும் என்று என்ன கட்டாயம்? இதே நிகழ்ச்சியை இன்னும் சுவையாக தமிழில் நடத்தினால் ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து தமிழ்நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், வானொலி நிலையங்களும் தயாராக இல்லை.

அதேபோல், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர் திடீரென பிரதமரின் இந்தி உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றின் மூலம் தேசப்பற்று ஊட்டப்படுவதாக வானொலி நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. தேசப்பற்று என்ற பெயரில் தமிழ்நாட்டின் மீது இந்தி திணிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற நிலைமையும், அதைச் சார்ந்த பரபரப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் இது பலரின் கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது.

ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது கூட இன ரீதியாகவும், மொழி சார்ந்தும் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், தமிழர்களை அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தும் மத்திய அரசு, தொடர்ந்து நமது உரிமைகளைப் பறிப்பது, நமக்கு உடன்பாடற்ற மொழி மற்றும் கலாச்சாரங்களைத் திணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பதாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் இதேபோன்ற இந்தித் திணிப்பு முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் அனுப்பிய 13/20/2014&P-III/125 என்ற எண் கொண்ட சுற்றறிக்கையில் அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று சென்னை வானொலி நிலைய கூடுதல் தலைமை இயக்குனர் ஆணையிட்டார். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் 24.10.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தேன். இதைத்தொடர்ந்து இந்தித் திணிப்பை கைவிட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் திணிக்கத் தொடங்கியுள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களின் விருப்பத்திலும், உரிமைகளிலும் குறுக்கீடு செய்யாமலிருப்பதுதான். மதிக்காமல் தமிழ்நாட்டில் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது. இதைக் கைவிட்டு தமிழகத்திலுள்ள வானொலி நிலையங்களின் மூலம் தரமான தமிழ் நிகழ்ச்சிகளை ஆனால், ஜனநாயகத்தை ஒலிபரப்ப மத்திய அரசும், பிரசார் பாரதியும் முன்வர வேண்டும்’’ என ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2