வாக்காளர்களுக்கு தான் முக்கியத்துவம்: மம்தாவிற்கு கமிஷனர் பதில்

கோல்கட்டா: தேர்தல் கமிஷனை பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிப்போம். அரசியல் கட்சிகளுக்கு 2வது முக்கியத்துவம் தான் என மே.வங்க மாநில துணை தேர்தல் கமிஷனர் சுதீப் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசும்போது, அமித் ஷாவின் கைப்பாவையாக, தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அவர் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம், என் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் விவேக் சஹாயை நீக்கியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து சுதிப் ஜெயின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் கமிஷன் தனது சுயசார்பு தன்மையை பராமரித்து வருகிறது. எந்த கட்சியுடனும் தேர்தல் கமிஷனை இணைத்து குற்றம்சாட்டி கேள்விக்கு உள்ளாவதை விரும்பவில்லை. தேர்தல் கமிஷனை சிறுமைப்படுத்துவது முறையானது அல்ல. தான் விரும்பும் காரணங்களுக்காக தொடர்ந்து ஏதாவது கட்டுக்கதைகளை உருவாக்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்தால், அது துரதிர்ஷ்டவசமானது. எதற்காக அவர் இப்படி செய்கிறார் என்பதற்கு அவர் மட்டுமே பதில் அளிக்க முடியும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக மாற்றங்கள் செய்கிறது என கடிதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பப்படுகிறது. எங்களை பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிப்போம். அரசியல் கட்சிகளுக்கு 2வது முக்கியத்துவம் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.