வலுவானது இந்திய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறது சீனா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாக மாறியிருப்பதாக சீன அரசின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறையின்கீழ் செயல்படும் ‘சர்வதேச ஆய்வுகளுக்கான சீன நிறுவனம்’ சார்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், அதன் துணைத் தலைவர் ரோங் யிங் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலுவானதாகவும் துடிப்பானதாகவும் மாறியிருக்கிறது. உலக அளவில் சிறந்த சக்தியாக இந்தியாவை எழுச்சிபெற செய்வதற்காக தனித்துவமான வியூகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சவாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பானுடன் இந்தியாவின் உறவுகள் மேலும் நெருக்கமடைந்துள்ளன. பரஸ்பரம் பலனளிக்கும் வகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியுள்ளது.
பிரதமர் மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து அண்டை நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பிரதமராக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக தெற்காசியாவிலேயே மிகச் சிறிய நாடான பூடானுக்குச் சென்றார்.
அவரது அரசின் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும், அண்டை நாடுகளுடான உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் தலைமை நாடாக
இந்தியாவை முன்னிறுத்தும் வகையிலும்
உள்ளன.
அண்டை நாடுகளுக்கு பெரிய அளவில் உதவுவதன் மூலம் அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மோடி அரசு தொடர்ந்து செயல்படுகிறது.
இதனால், இந்திய உதவியுடன் அண்டை நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றன.
இந்தியப் பிரதமராக மோடி பொறுப்பேற்றதில் இருந்து, இந்திய – சீன உறவுகள் சீரான அளவில் மேம்பட்டு வருகின்றன. வரும் காலங்களிலும் இந்த நிலை தொடருவதே இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் சீனா முட்டுக்கட்டையாக இல்லை.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய தடை இந்தியாவேதான்.
சீனாவைப் பொறுத்தவரை, இந்தியா முக்கியமான அண்டை நாடு; மிகப் பெரிய சந்தையான அந்நாட்டில், சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன.