வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்காக தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஒரு ஜனநாயக படுகொலை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதைப்போல பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை என தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது வெறும் ஒரு சரிபார்த்தல் நடவடிக்கை மட்டுமே எனக்கூறிய தேர்தல் கமிஷன் இயக்குனர் (செலவினம்) திலிப் சர்மா, வருமான வரிச்சட்டப்பிரிவு 131-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜனை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.