வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, தேர்தல் சமயத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தினால் மம்தாவின் யுக்திகளை தானும் கையாள வேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை குமாரசாமி, வருமானவரித்துறையை வைத்து நடத்தும் சோதனைகள் தான் பிரதமர் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக், இந்த விளையாட்டில் ஐடி அதிகாரி பாலகிருஷ்ணன், மோடிக்கு உதவி வருகிறார். அரசு இயந்திரங்களையும், ஊழல் அதிகாரிகளையும் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க மோடி பயன்படுத்துகிறார் என டுவிட்டரில் குமாரசாமி கருத்து பதிவிட்டார்.
சிறிது நேரத்திலேயே அவர் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் வீடுகள், அவர்களின் உறவினர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.