வருமான வரிசோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம் போலீசாரை தள்ளியதால் பரபரப்பு

விஜயபாஸ்கர் வீட்டில் பரபரப்பு . பாதுகாப்பு படையினரும், வருமானவரித்துறையினரும் அத்துமீறுகின்றனர் என அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீடு  திருவல்லிக்கேணியில் உள்ளது. அங்கு நடந்த சோதனையில் 2.2 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

விஜயபாஸ்கர் வீட்டின் நுழைவு வாயிலில் வாக்குவாதம்; வீட்டிற்குள் அனுமதிக்ககோரி சிஆர்பிஎப் வீரர்களுடன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து
புதுக்கோட்டையை சேர்ந்த பிரமுகர் ஒருவர் விசாரணைக்காக வருமானவரித்துறை அலுவலகத்திற்கு சிஆர்பிஎப் வீரர்கள் இருவரால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

எம்.எல்.ஏக்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யபட்டது.
சோதனை நடந்துகொண்டிருந்தபோது, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியே வந்து, ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மத்திய தொழில்பாதுகாப்புப் படையினர், அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதனால், அவருடன் விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவரை பாதுகாப்புப் படையினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தடுத்த டிரைவரை பாதுகாப்புப் படையினர் தாக்கினர்.

விஜயபாஸ்கர்  வீட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களிடையே பேசும் போது கூறியதாவது:

காலை 4 மணியில் இருந்து தன்னை வீட்டில் அடைத்து வைத்து உள்ளனர். குழந்தையை கூட பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை.அவர்களுக்கு நான் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கிறேன். என்னுடைய வீட்டில் இருந்து அவர்கள் எதையும் பறிமுதல் செய்யவில்லை. பாதுகாப்பு படையினரும், வருமானவரித்துறையினரும் அத்துமீறி செயல்படுகின்றனர்.

தமிழக சுகாதாரத்துறையைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் இன்று விருது வழங்குகிறார். விருதைப் பெற முடியாமல் தேவையற்ற பழியைச் சுமத்தி உள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவுகொடுத்த சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தாய் என கேட்கிறார்கள்.

அரசியல்ரீதியாகப் பழிவாங்கவும் தவறான பிரசாரத்தைச் செய்யவும் சோதனைசெய்கின்றனர். காலை 6 மணிக்கு வீட்டை திறந்துவிட்டு விட்டேன். இதுவரை 10,000 ரூபாய் கூட எடுக்கவில்லை” என்று கூறினார்.

வருமான வரித்துறையினர் நடத்திவரும் சோதனைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தின் முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசமாகப் பேசியதால், அவரை மத்திய தொழில்பாதுகாப்புப் படையினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சி.ஆர்.பி.எப் படை வீரர்கள்  அமைச்சரின் கார் டிரைஅவரை தாக்கியதாக போலீசில் புகார் செய்யபட்டு உள்ளது.