வசூல் களம்: 2017 முதல் அரையாண்டில் கரைசேர்ந்த படங்களின் பின்னணி!

ஜனவரி 6 அன்று வெளியான ‘பெய்யென பெய்யும் குருதி’ படத்திலிருந்து ஜூன் -30 அன்று வெளியான ‘யானும் தீயவன்’ வரை கடந்த 6 மாதங்களில் சுமார் 100 படங்கள் வெளியாகியுள்ளன. சிக்கல்கள், பெரிய நாயகர்கள் படங்களின் தோல்வி, புதுமுக இயக்குநர்களின் எழுச்சி எனப் பல விஷயங்களைக் கடந்துள்ளது தமிழ்த் திரையுலகம்.

பெரிய படங்களின் தோல்வி

விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ‘பைரவா’, ‘சி3’, ‘போகன்’, ‘காற்று வெளியிடை’, ‘ப.பாண்டி’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘வனமகன்’, ‘கவண்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் ‘ப.பாண்டி’ மட்டுமே போட்ட முதலீட்டுக்கு மோசமில்லாமல் வசூலித்தது. மற்ற அனைத்துப் படங்களாலும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமே. ‘கவண்’, ‘ப.பாண்டி’, ‘கடுகு’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்கள் போட்ட முதலீட்டுக்கு மோசம்செய்யவில்லை. இதில் ‘கவண்’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் நேரடியாக விநியோகித்தது.

முன்னணி விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசிய போது, “இதுவரை எந்தவொரு பெரிய நடிகரின் படமும் லாபம் தரவில்லை. முதலில் தயாரிப்பாளர்கள் கதையைக் கேட்டு முடிவுசெய்ய வேண்டும். ஆனால், இங்கோ நடிகர்கள் கதையைக் கேட்டுப் படத்தை முடிவு செய்கிறார்கள். இது மாறினால் மட்டுமே சரியாகும்” என்றார் ஆதங்கத்துடன்.

புதுமுக இயக்குநர்களின் எழுச்சி

‘அதே கண்கள்’, ‘மாநகரம்’, ‘8 தோட்டாக்கள்’, ‘ப.பாண்டி’, ‘லென்ஸ்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘ரங்கூன்’, ‘மரகத நாணயம்’, ‘பண்டிகை’ ஆகிய படங்கள் மூலம் புதிய இயக்குநர்கள் கவனிக்கவைத்தார்கள். விநியோகஸ்தர்கள் தரப்பில் ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய படங்கள் நல்ல லாபத்தை அளித்திருக்கின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.கே.சரவணன் இருவரின் அடுத்த படங்களுக்குத் தற்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இவர்களுடைய அடுத்த படங்களின் பெரிய நாயகர்கள் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற பேச்சு தமிழ்த் திரையுலகில் கேட்கத் தொடங்கியுள்ளது. அதைப் போலவே லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடிக்க கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

மேலும், ‘குற்றம் 23’ திரைப்படமும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபமளித்தது. அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் இருவரின் அடுத்த படங்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

‘பாகுபலி 2’ அபார சாதனை

இந்த ஆண்டில் விநியோகஸ்தர்களின் தேர்வு என்றால் ‘பாகுபலி 2’தான். 47 கோடிக்குத் தமிழக உரிமையை வாங்கினார் சரவணன். முதல் காட்சி வெளியாவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், 12 மணியிலிருந்து சுனாமி போன்று மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்குப் படையெடுத்தது. தமிழ்த் திரையுலக வரலாற்றில் அதிக மக்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்த்த படம் ‘பாகுபலி 2’தான். மேலும், 47 கோடி ரூபாய் போக வந்த பெருமளவு வசூலில், தயாரிப்பாளருக்குச் சில கோடிகளை மீண்டும் கொடுத்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களுக்குக்கூட இப்படி நடந்தது கிடையாது. தற்போது வெளியாகும் புதிய படங்களுக்கு நிகராக, வார இறுதி நாட்களில் சுமார் 40% அளவுக்குக் கூட்டம் இருக்கிறது.

தொடரும் சோகம்

இந்தாண்டின் தொடக்கத்திலேயே பண மதிப்பு நீக்கத்தால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அதிலும் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் சென்னையில் வசூல் கடுமையாகப் பாதித்தது. ஏப்ரல் மாதத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் அணி கைப்பற்றியது. பல்வேறு புதிய விஷயங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கான வருமானத்தைப் பெருக்க அவரது அணியினர் வழிவகைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜி.எஸ்.டிக்கு மேலாகத் தமிழக அரசு கேளிக்கை வரி விதிப்பால் ‘இவன் தந்திரன்’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. தமிழக அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக மட்டுமே கேளிக்கை வரி நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 24 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு தெரியவுள்ளது. சினிமா டிக்கெட் கட்டணத்தோடு ஜி.எஸ்.டியும் சேர்க்கப்பட்டு இருப்பதால், தற்போது கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதனால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எப்படி இந்த அளவுக்குக் கூட்டம் குறைந்தது என்ற சோகத்தில் உள்ளனர் தமிழ்த் திரையுலகினர்.

தண்ணீர் காட்டும் தணிக்கை

கடந்த 6 மாதங்களில் புதிய படங்களுக்குத் தணிக்கை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. புதிய படங்களுக்கு இணையம் வழியாகப் பதிவுசெய்தால் மட்டுமே தணிக்கை செய்ய முடியும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு விதித்துள்ளது. இதில் ஆதார் எண் உள்ளிட்ட தயாரிப்பாளரின் பல்வேறு அடிப்படைத் கேட்கப்படுவதால் அவர்கள் மிகவும் தவிக்கிறார்கள். அவ்வாறு பதிவுசெய்து தணிக்கை செய்யப்படும்போது, ‘ஏன் இந்தக் காட்சி’, ‘சண்டைக் காட்சியைக் குறைக்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளைத் தணிக்கை அதிகாரிகள் விதிப்பதால் சர்ச்சைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதை எளிமைப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகமாகக் கேளிக்கை வரியை அரசாங்கம் ரத்து செய்திருப்பதால் இயக்குநர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இனிமேல் ‘யு’ சான்றிதழ் வேண்டும், ஆங்கிலத்தில் தலைப்பு இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறி வருகிறார்கள்.

அடுத்த 6 மாதங்கள் தமிழ்த் திரையுலகின் போக்கை நிர்ணயிக்கப் போகும் முக்கியமான மாதங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஏனென்றால் அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் தமிழ் சினிமா திரும்புமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

பெரிதும் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள்

சி3
போகன்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
காற்று வெளியிடை
கவனம் ஈர்த்த புதிய இயக்குநர்கள்

அதே கண்கள் – ரோஹின் வெங்கடேசன்
மாநகரம் – லோகேஷ் கனகராஜ்
8 தோட்டாக்கள் – ஸ்ரீகணேஷ்
ப.பாண்டி – தனுஷ்
சங்கிலி புங்கிலி கதவ தொற – ஐக்
ஒரு கிடாயின் கருணை மனு – சுரேஷ் சங்கையா
மரகத நாணயம் – ஏ.ஆர்.கே.சரவன்
முதலுக்கு மோசமில்லை

கவண்
சங்கிலி புங்கிலி கதவ தொற
தொண்டன்
எமன்
வணிக ரீதியில் வெற்றி

மரகத நாணயம்
மாநகரம்
குற்றம் 23