வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மக்களை காக்க, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை, நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை, உடனடியாக வெளியேற்ற வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேற்று மதியம், தென் மேற்கு வங்கக் கடலில், மூன்று மணி நேரமாக நிலை கொண்டிருந்த, ‘நிவர்’ புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது.
இன்று இரவு, புதுச்சேரி அருகே, கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது, 100 முதல், 145 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில், கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு, மக்கள் உதவிக்கு, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று, அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மதியம் முதல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று இரவு, தென் மாவட்டங்களுக்கு செல்லவிருந்த பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, பணம் திரும்ப வழங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன.இன்று, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மழையில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்க, இன்று மாநிலம் முழுதும், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள, மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆய்வு செய்தார்.

அதன்பின், நிருபர்களிடம் முதல்வர் கூறியதாவது: ‘நிவர்’ புயல், இன்று கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில், அதிக மழை பெய்யும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள், எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. 3,846 நிவாரண முகாம்கள், தயாராக உள்ளன. தற்போது, 256 பேர், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக் கூடாது. ஏழு மாவட்டங்களில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, அரசு அலுவலகங்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், பணிக்கு வருவர். மாநிலம் முழுதும், இன்று பொது விடுமுறை விடப்படுகிறது.அதன்பின், நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து நிவாரண முகாம்களிலும், தங்க வைக்கப்படுவோருக்கு, தேவையான வசதிகள் செய்து கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த வழிமுறைகளை, மக்கள் பின்பற்ற வேண்டும். யாரும் அச்சப்படத் தேவையில்லை.

சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில், 21.50 அடி நீர் உள்ளது. முழு கொள்ளளவு, 24 அடி. தண்ணீர், 22 அடி வந்ததும், கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரி நிரம்பினால், உபரி நீர் திறக்கப்படும்.

நீண்ட காலமாக துார் வாரப்படாத ஏரிகள் எல்லாம், குடிமராமத்து திட்டத்தில் துார் வாரப்பட்டுள்ளன. எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும், மக்களை மீட்க, அரசு தயாராக உள்ளது.புயல் வரும்போது, மக்களுக்கு உதவ, 43 ஆயிரத்து, 450 முதல் நிலை மீட்பாளர்கள்; கால்நடைகளை பாதுகாக்க, 8,871 பேர்; மரங்களை அகற்ற, 9,909 பேர்; பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற, 5505 காவலர்கள்; 691 ஊர் காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தயாராக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.