லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது

சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிஷா முதல்வராக பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை சரியில்லை.2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, ஒடிஷாவில் பா.ஜ.,வை வளர்க்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அம்மாநிலத்தில காங்., வீழ்ச்சி அடைந்த பிறகு பா.ஜ.,வுக்கும் பி.ஜ.த.,க்கும் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு 21 லோக்சபா தொகுதிகள், 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 தொகுதிகளில் பா.ஜ.,வும் பி.ஜ.த.,வும் நேரடியாக மோதுகின்றன.

சட்டசபை தேர்தலி்ல் நிலைமை கொஞ்சம் வேறுபடுகிறது. பி.ஜ.த., எம்.பி., ததகத் சத்பதி கூறும்போது, ‛‛லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக வெற்றிகளை சுவைக்கலாம். சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வெற்றி பெறுவார். மக்கள் சரியாக பிரித்து ஓட்டளிப்பர்” என்கிறார்.

‛‛பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற விஷயங்களில் பா.ஜ., அரசை நவீன் ஆதரித்தார். எனவே, நவீன் மூலம் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குப் பதில் நேரடியாகவே பா.ஜ.,வுக்கே ஓட்டளிக்கலாம் என்று மக்கள் நினைக்கின்றனர்” என்று மற்ற தலைவர்கள் கூறுகின்றனர்.2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., 21.5 சதவீத ஓட்டுகளை பெற்றது. 9 தொகுதிகளில் 2வது இடத்தையும் மற்ற தொகுதிகளில் 3வது இடத்தையும் பெற்றது.

ஆனால் சட்டசபை தேர்தலில் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.ஒடிஷாவுக்கு பொறுப்பு வகிக்கும் பா.ஜ., பொதுச்செயலாளர் அருண் சிங் கூறும்போது, ‛‛மாநிலத்தில் பா.ஜ., உறுப்பினர்களின் எணணிக்கை 3 லட்சத்தில் இருந்து 36 லட்சமாக உயர்ந்துள்ளது” என்கிறார்.2017 பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., உறுப்பினர்களின் எண்ணிக்கை 36ல் இருந்து 296 ஆக உயர்ந்தது.