லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றக் கூடாதா?

ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் பகுதியில் மூவர்ண கொடியை பா.ஜ.,வினர் ஏற்ற முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் அங்கு இன்னும் சிலர் இதை அரசியல் சர்ச்சையாக்குகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தால் அம்மாநிலத்தில் பிரச்னை ஏற்படாமல் தடுக்க பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். சமீபத்தில் தான் மெஹபூபா முப்தி விடுக்கவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”என் கொடி ஜம்மு காஷ்மீர் கொடி தான். இது மீண்டும் கொண்டு வரும்போது மூவர்ணகொடியும் தானாக இதன் உடன் மேல் எழும். எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வரும் வரை வேறு எந்த கொடியையும் ஏற்றப்போவதில்லை. மத்திய பா.ஜ., அரசு, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பா.ஜ.வை சேர்ந்த மூன்று பேர், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இன்று(அக்., 26) மூவர்ண கொடியுடன் வந்து அங்குள்ள மணிக்கூண்டில் ஏற்ற முற்பட்டனர். அவர்களை உடனடியாக தடுத்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். இது சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. #LalChowk என்ற பெயரில் ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

”அது தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு விட்டதே. பின்பு ஏன் இன்னும் அங்கு மூவர்ண கொடியை ஏற்ற விட போலீசார் மறுக்கிறார்கள். லால் சவுக் இந்தியாவில் தானே உள்ளது. பா.ஜ.,வினர் தேசிய கொடியை தான் ஏற்ற முற்பட்டார்கள். வேறு குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. ஏன் போலீசார் இதை தடுக்க வேண்டும்” என பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.