‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, ‘லவ் ஜிகாத்’ என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில், 21 வயது கல்லுாரி மாணவி, தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுத்தார். இதையடுத்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் தப்பினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேறு மதத்தைச் சேர்ந்த இளம் பெண்களை காதலித்து, கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தும், ‘லவ் ஜிகாத்’ காரணமாக, மாணவி படுகொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.’குற்றவாளிகளை போலீசார் ‘என்கவுன்டர்’ செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க முடியாது’ என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், படுகொலை சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, போலீசார் கைப்பற்றினர். துப்பாக்கியால் சுட்ட தவுசிப் என்ற குற்றவாளி, கைது செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், தவுசிப் மீது, 2018லேயே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது, பிரச்னை சமரசத்தில் முடிந்ததால், தவுசிப் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது உள்ளது.இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து, பரிதாபாத் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது.