ரோஹித், தவான் விளாசல்; இந்தியா அசத்தல் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‛டி-20′ கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோஹித், தவான் அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, டப்ளின் நகரில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற அயர்லாந்து அணி கேப்டன் வில்சன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஸ்டூவர்ட் தாம்ப்சன் வீசிய 3வது ஓவரில், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். பாய்டு ரான்கின் வீசிய 4வது ஓவரில், 2 பவுண்டரி விளாசினார் ரோகித். கெவின் ஓபிரையன், பீட்டர் சேஸ், ஜார்ஜ் டாக்ரெல் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட தவான், 27 பந்தில் அரைசதம் அடித்தார். சிமி சிங், ரான்கின் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரோகித், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது கெவின் ஓபிரையன் பந்தில் தவான் (74) அவுட்டானார்.

அடுத்து வந்த ரெய்னா (10), தோனி (11) நிலைக்கவில்லை. கேப்டன் கோஹ்லி ‘டக்-அவுட்’ ஆனார். அபாரமாக ஆடிய ரோகித் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்திய அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா (6) அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து சார்பில் பீட்டர் சேஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் (1) ஏமாற்றினார். ஆன்டி பால்பிர்னீ (11), சிமி சிங் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ஜேம்ஸ் ஷனான், 29 பந்தில் அரைசதமடித்தார். குல்தீப் ‘சுழலில்’ ஷனான் (60) சிக்கினார். சகால் பந்தில் கெவின் ஓபிரையன் (10), கேப்டன் வில்சன் (5) வெளியேறினர். அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குல்தீப் 4, சகால் 3 விக்கெட் வீழ்த்தினர்.

அயர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், 100வது சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமை பெற்றது இந்தியா. ஏற்கனவே பாகிஸ்தான் (128 போட்டி), நியூசிலாந்து (111), இலங்கை (108), தென் ஆப்ரிக்கா (103), ஆஸ்திரேலியா (100), இங்கிலாந்து (100) அணிகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தன.