ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம், சிறிய பவுண்டரி எல்லை என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார். கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், முதன் முறையாக உலக கோப்பை போட்டியில் களமிறங்கினார்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித், இத்தொடரில் நான்காவது சதம் எட்டினார். இவர் 104 ரன்னுக்கு அவுட்டானார். லோகேஷ் ராகுல் 77 ரன்கள் எடுக்க, கோஹ்லி 26 ரன்னுக்கு வீழ்ந்தார்.

பாண்ட்யா ‘டக்’ அவுட்டானார். இளம் வீரர் ரிஷாப் பன்ட் 48 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 8, தோனி 35, புவனேஷ்வர் 2, ஷமி 1 ரன் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன் எடுத்தது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் நான்கு விக்கெட் கீப்பர்கள் விளையாடுகின்றனர். இந்திய அணியில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். தவிர, விளையாடும் 11 பேரில் தினேஷ் கார்த்திக் (கோல்கட்டா), லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), ரிஷாப் பன்ட் (டில்லி) ஆகியோர் ஐ.பி.எல்., தொடரில் விக்கெட் கீப்பர்களாக செயல்பட்டுள்ளனர்.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித் 5 சிக்சர்கள், ராகுல், தோனி தலா 1 சிக்சர் விளாசினர். முஸ்தபிஜுர் பந்தில் ரோகித் அடித்த சிக்சர், இத்தொடரில் அடிக்கப்பட்ட 300வது சிக்சராக அமைந்தது. தவிர, உலக கோப்பை தொடரில் 300 சிக்சர் அடிக்கப்பட்ட மூன்றாவது தொடராக இது ஆனது. கடந்த 2015ல் (ஆஸி., நியூசி.,) நடந்த உலக கோப்பை தொடரில் அதிகபட்சம் 463 சிக்சர் (48 போட்டி) அடிக்கப்பட்டன. அடுத்து விண்டீசில் நடந்த 2007 தொடர் 2வது இடம் பெற்றது. இங்கு நடந்த 51 போட்டிகளில் 373 சிக்சர் விளாசப்பட்டன.

தற்போதைய தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், அதிகபட்சம் 22 சிக்சர் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பின்ச் (18), விண்டீசின் கெய்ல் (12), இந்தியாவின் ரோகித் சர்மா (12) அடுத்த இடங்களில் உள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்த ரோகித் சர்மா(104), இத்தொடரில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன் தென் ஆப்ரிக்கா (122), பாகிஸ்தான் (140), இங்கிலாந்து (102) அணிகளுக்கு எதிராக சதம் அடித்தார்.

2019 உலக கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக தனது 4வது சதத்தை பதிவு செய்த ரோகித், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 7 போட்டிகளில் 544 ரன்களை 90.67 சராசரியுடன் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில், ஆஸி.,யின் டேவிட் வார்னர்(516), ஆரோன் பின்ச்(504) ஆகியோர் உள்ளனர்.