ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்

“வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்” ரொறன்ரோ நூல் அறிமுக விழாவின் போது தகைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பின் ஒரு பகுதி ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கென அதன் இயக்குனர்கள் வசம் கையளிக்கப்பட்டுள்ளது.

உலகில் செம்மொழி எனத் தகுதிபெற்ற ஏழு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். தாயகத்துக்கு வெளியே ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழ்பேசும் மக்கள் கனடாவில் வாழ்கின்ற சூழலில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது ஒரு அரிய வாய்ப்பாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கும் இடமளிக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தின் வாயிலாக பெறப்படும் வட்டியிலும், பல்கலைக்கழகம் வழங்கும் மேலதிக நிதியுதவியிலும் தமிழ் இருக்கை காலம், காலமாக சிறப்பாக செயற்படும்.

உலகெங்கணும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தமிழின் உயர்வுக்கு கைகொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகிவிட்டது. அதன் ஒரு அங்கமாக ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தாராளமாக அள்ளிவழங்க அனைவரும் முன்வரவேண்டுமென வி. என். மதிஅழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.