‘ரெய்டில்’ கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம்

நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வரும், எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனத்துக்கு தொடர்புடைய, 50க்கும் மேற்பட்ட இடங்களில், இரண்டாவது நாளாக, நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரண்டு நாள், ‘ரெய்டில்’ கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 105 கிலோ தங்கம் சிக்கியது. மேலும், ஏராளமான ஆவணங்கள், சொகுசு கார்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக,வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு, எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள கீழமுடி மன்னார் கோட்டையைச் சேர்ந்தவர், கான்ட்ராக்டர் செய்யா துரை; இவரது மகன் நாகராஜன், எஸ்.பி.கே., நிறுவனத்தின் உரிமையாளர். செய்யாதுரைக்கு, ஈஸ்வரன், பாலு, கருப்பசாமி ஆகிய மகன்களும் உள்ளனர்.

இவர்கள், இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். நெடுஞ்சாலை துறையின் கீழ், சாலைகள் அமைத்தல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் என, அனைத்து ஒப்பந்தப் பணிகளையும், இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. செயல்பாட்டு அடிப்படை யிலானபராமரிப்பு ஒப்பந்தத்தை, நெடுஞ்சாலை துறை அறிமுகம் செய்தது முதல், திருவள்ளூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்ட கோட்ட பணிகள் அனைத்தும்,இந்நிறுவனத் திற்கே கிடைத்து வருகின்றன.

கிட்டத்தட்ட, 2,500 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம், நீண்ட நாட்களாக கண்காணித்து வந்த, வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம், அதிரடியில் இறங்கினர்.

அருப்புக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரத்தில் உள்ள உரிமையாளர் வீடு, மதுரையில் உள்ள நட்சத்திர விடுதிகள், திருநெல்வேலியில் உள்ள அலுவலகங்களில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மேலும், சென்னையில் நாகராஜன் வீடு, போயஸ் கார்டனில்

உள்ள உறவினர், தீபக் வீடு, பெசன்ட் நகரில்உள்ள முன்னாள் அமைச்சர், கே.என்.நேரு சகோதரர், ரவிச்சந்திரன் வீடு, அண்ணா நகர், அபிராமபுரம், தாம்பரம், சேத்துப்பட்டு, மயிலாப்பூர் உட்பட, 50க்கும் மேற்பட்ட இடங்களில், இரண்டாவது நாளாக, நேற்றும் சோதனை தொடர்ந்தது.
இந்த இரண்டு நாள் சோதனையில், ஊழியர்கள், கூட்டாளிகளிடம் இருந்து, கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. மொத்தம், 170 கோடி ரூபாய் பணம் சிக்கியதாக தெரிகிறது. மேலும், ஏராளமான ஆவணங்கள், இரு சொகுசு கார்கள், டைரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நிறுவன வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பணப் பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு நாள் சோதனையில், கட்டிகளாகவும், நகைகளாக வும், 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து, வருமான வரி துறைவெளியிடப்பட்ட அறிக்கை: நாகராஜன் செய்யாதுரைக்கு சொந்தமான, ‘பி.எஸ்.கே., அண்டு கோ’ நிறுவனத்தில், 16ம் தேதி காலை, 5:30 மணி முதல் சோதனை நடந்தது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 170 கோடி ரூபாய் வரையிலான ரொக்கம் மற்றும், 105 கிலோ வரையிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மறைத்து வைக்கப்பட்டி ருந்த, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து, இவை கைப்பற்றப்பட்டன.

மேலும், பல்வேறு ஆவணங்கள், டைரிகள், ‘ஹார்டு டிஸ்க்’ உட்பட பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. மேலும், நாகராஜன் வீட்டிலிருந்து, 24 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதர ரொக்கமும், தங்கமும், நிறுவன ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இரண்டு, பி.எம்.டபிள்யு., கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் காட்டப்படாத சொத்துகள், துணை ஒப்பந்ததாரர்கள், பணியாளர் ஒப்பந்ததாரர்கள் வழியாக கிடைத்ததாக, விசாரணை யில் தெரிய வந்தது.

கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணத்தை, தங்கமாக மாற்ற உதவிய நகை வியாபாரி, கணக்கு தணிக்கை செய்த, ‘ஆடிட்டர்’ மற்றும் பின்னணியில் உள்ள துணை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.