‘ரூ.800 கோடி’ வரி ஏய்ப்பு: கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு

வருமான வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, ‘கல்கி’ சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது,அன்னிய செலாவணி சட்டத்தில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார். இவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், வரதய்யபாளையம் என்ற இடத்தில், பல நுாறு ஏக்கர் பரப்பளவில், கல்கி பகவான் ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
இதன் கிளைகள், நாடு முழுவதும் உள்ளன; வெளிநாடுகளிலும் உள்ளன.

கல்கி சாமியார் என அழைக்கப்படும், விஜயகுமாரை தரிசனம் செய்ய, 5,000 ரூபாய் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து, 16ம் தேதி, 250க்கும் மேற்பட்ட, வருமான வரி அதிகாரிகள், 40 குழுக்களாக பிரிந்து, தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி பவான் ஆசிரமம் மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூரில், விஜயகுமாரின் மகன், கிருஷ்ணா நடத்தி வரும் நிறுவனங்கள், அலுவலங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 44 கோடி ரூபாய் ரொக்கம், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள, 88 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின.
தொடர் விசாரணையில், விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், 800 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது.
மேலும், சட்ட விரோதமாக, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், 100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ததுள்ளனர். இதையடுத்து, கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, அன்னிய செலாவணி சட்டத்தில், சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.