ரூபாய் வாபஸ் திட்டத்தை விமர்சிக்கவில்லை: சந்திரபாபு நாயுடு விளக்கம்

மத்திய அரசு எடுத்த முடிவை விமர்சித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள சந்திர பாபு நாயுடு, மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- “ ரூபாய் நோட்டு தடையை அமல்படுத்தியதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒருமாதத்திற்கு மேலாகியும் ரூபாய் தட்டுப்பாடு நிலவுவது குறித்து  மட்டுமே நான் கருத்து தெரிவித்தேன். ஏ.டி.எம் மையங்கள் முன் வரிசையில் நிற்கையில் முதியவர்கள் உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிக்கிறது.
ஹூட்ஹூட் புயல் போன்ற மிகப்பெரும் இயற்கை பேரிடரை நாங்கள் எதிர்கொண்டு அதை திறம்பட சமாளித்துவிட்டோம். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இன்னும் முழுக்கட்டுப்பாட்டை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை” என்றார்.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பின், இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியவர்களில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவும் ஒருவர் ஆவார். மத்திய அரசின் முடிவை பாராட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, ஊழலை ஒழிக்க இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் பிரதமரிடம் மனு அளித்து இருந்ததாகவும், எனவே இது தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும் தெரிவித்து இருந்தார்.
ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு எழும் பிரச்சினைகள் குறித்து கண்காணிக்க மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவராக சந்திரபாபு நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்ததக்கது.  பண விநியோக நடவடிக்கைய கண்காணிக்க தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுவதாகவும் இந்த நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம் என்று யோசனை கூறுமாறு அதிகாரிகளை கேட்டுவருவதாகவும் சந்திரபாபு நாயுடு  இன்று தெரிவித்தார்.