‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ என்னை கொல்ல சதி செய்கிறது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று, வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘ இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொல்ல சதி செய்கிறது. ஆனால், இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியாது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முழுமையாக தெரியாது. அது போல தான் இது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சூழ்நிலையில் தான் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இது போல் பேசியது ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசுமறுத்துள்ளது. ‛‛அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன அப்படி பேசவில்லை” என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

இலங்கை தலைவர்கள் இந்தியாவை குற்றம் சாட்டுவது இது முதல் முறை அல்ல. 2015ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக்ஷே தோல்வியை சந்தித்த போது, ‘ரா’ அமைப்பு மீது குற்றம் சாட்டினார்.