ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், குடியிருப்புகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார். இதேபோல் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ராயப்பேட்டை காவல் நிலையம்
சென்னை அடையாறு, பசுமைவழி சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 4 அரசு மாளிகைகள் என மொத்தம் ரூ.155 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டிலான பொதுப்பணித்துறை திட்டங்களை முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார்.

 

இதேபோல் சென்னை திருவொற்றியூரில் 32 குடியிருப்புகள் உள்பட ரூ.41 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 363 காவலர் குடியிருப்புகள், சென்னை ராயப்பேட்டையில் புதிய காவல் நிலையம், காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர், கூவத்தூர், சாலவாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் மற்றும் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள 25 காவல் நிலையங்களையும் அவர் திறந்துவைத்தார்.

 

காவலர்கள் பாசறை
சென்னை திருவொற்றியூரில் 250 காவலர்களுக்கான பாசறை உள்பட ரூ.18 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 இதர காவல் துறை கட்டிடங்கள், சென்னை தங்கச்சாலையில் கட்டப்பட்டுள்ள 50 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை என மொத்தம் 108 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 488 காவல் துறை குடியிருப்புகள், 8 இதர காவல் துறை கட்டிடங்கள், மாவட்ட சிறைச்சாலை கட்டிடம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடம் ஆகியவற்றையும் முதல்–அமைச்சர் திறந்துவைத்தார்.

 

ரெயில்வே மேம்பாலம்
காஞ்சீபுரம் மாவட்டம், சென்னை – பொன்னேரிக்கரை –காஞ்சீபுரம் சாலையில், காஞ்சீபுரம் ரெயில் நிலையம் அருகில் 927 மீட்டர் நீளத்தில் 49 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 4 வழித்தட ரெயில்வே மேம்பால பணிக்கு முதல்–அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் சாலையில் கட்டப்பட்டு உள்ள உயர்மட்ட பாலம், காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் – பனையூர் சாலையில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்; திருவள்ளூர் மாவட்டம் – எண்ணூர் அத்திப்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே அத்திப்பட்டு அருகில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் என ரூ.86 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 உயர்மட்ட பாலங்கள், 6 பாலங்கள், 4 சிறு பாலங்கள் மற்றும் ஒரு ரெயில்வே மேம்பாலம் உள்பட 87 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.