ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து செவ்வாய்கிழமை தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தொடர் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.
மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்தும் தங்கச்சிமடத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தங்கச்சிமடத்தில் ஸ்டாலின், பன்னீர் செல்வம், திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், வாசன், ஜி.கே.மணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாலபாரதி, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
85 தமிழக மீனவர்கள் விடுதலை
மீனவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் தலைமையில் இரு நாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறைகளில் உள்ள 85 தமிழக மீனவர்களையும், இந்திய சிறைகளில் உள்ள 15 இலங்கை மீனவர்களையும் பரஸ்பரம் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை 85 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை மத்திய அரசு சார்பாக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் வெறுமனே பேச்சுவார்த்தையை மட்டும் நம்பி போராடடத்தை கைவிட முடியாது என அறிவித்தனர்.
தொடர்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தங்கச்சிமடத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணனும் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,

”பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தங்கச்சிமடம் வந்திருக்கிறேன். சம்பவம் நடைபெற்ற மறுநாளே இந்திய வெளியுறவுத்துறை மூலம் கொழும்பில் உள்ள தூதர் மூலம் இலங்கை பிரதமரிடம் கண்டனத்தை தெரிவித்தோம். இலங்கை பிரதமர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் உன உறுதி அளித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.

மீனவர்கள் தரப்பில் மீனவர் பிரிட்ஜோவை சுட்டவரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என உத்திரவாதமும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீனவர் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு சார்பாக மீனவர் பிரிட்ஜோவை சுட்டவரை கைது செய்து தண்டனை வழங்கப்படும், இலங்கையில் உள்ள படகுகள் மீட்டுத் தரப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு மத்திய அரசு பணியும், நிவாரணமும் வழங்க பரிசீலனை செய்யப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது.

தங்கச்சி மடத்தில் பிரிட்ஜோ உடல் அடக்கம்
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து தங்கச்சிமடத்தில் நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை மாலை மீனவர் பிரிட்ஜோவின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டு வாபஸ் பெறப்படும்.
ஆனால்,அறிவிக்கப்பட்டபடி திங்கட்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஆறு மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தங்கச்சிமடம் போராட்டப் பந்தலில் அறிவிக்கப்பட்டது.