ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ஸ்ரீநகர்: ராணுவத்தினரை எனது குடும்பமாக கருதி தீபாவளி கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடி வருகிறார். முன்னதாக கடந்த 2014ல் காஷ்மீரில் தீபாவளியை கொண்டாடினார். 2015 ம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும், 2016ம் வருடம் இமாச்சல பிரதேசத்திலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார்.

இதன்படி, இந்த வருடம் தீபாவளியை எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள காஷ்மீரின் குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீநகர் வந்த பிரதமரை, ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்றார். அங்கிருந்து பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடியுடன் அதிகாரிகள் உடன் வந்தனர். அங்கு வீரர்களுக்கு பிரதமர் மோடி இனிப்புகளை வழங்கி தீபாவளியை கொண்டாடினார். வீரர்களும், பிரதமருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். வீரர்களுடன், பிரதமர் மோடி 2 மணி நேரம் உடனிருந்தார். தீபாவளி கொண்டாட பிரதமர் காஷ்மீர் வருவது இது இரண்டாவது முறையாகும்.

ராணுவ உடையணிந்து வந்த பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசுகையில் ராணுவத்தினரையே எனது குடும்பத்தினராக கருதுகிறேன். இதனால், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. வீரர்களை சந்திக்கும் போதும், அவர்களுடன் இருக்கும் போதும் எனக்கு புதிய சக்தி கிடைக்கிறது. மோசமான சூழ்நிலைகளிலும் வீரர்களின் தியாகம் பாராட்டுதலுக்கு உரியது. முப்படையினரின் நலத்திட்டங்களுக்கு அரசு உறுதி பூண்டுள்ளது. ஒரு பதவி,ஒரு பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஓய்வு பெறும் ராணுவ வீரர்கள், சிறந்த யோகா பயிற்சியாளர்களாக மாறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதனிடையே, ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் பிரத்யோக போனுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.500 ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கப்பட் தொகை ரூ.5லிருந்து ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.